முன்னாள் எம்.பி ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் பிள்ளையான் தரப்பினர் முன்வைத்த பிணை மனுக் கோரிக்கைக்கு அமைவாக, இவர்களை பிணையில் விடுவிக்க நீதிபதி ரி. சூசைதாஸன் உத்தரவிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி, நத்தார் தின நள்ளிரவன்று - மட்டக்களப்பு புனித மரியாள் தேவலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் சந்தேக நபர்களாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்னாணந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், ராணுவப் புலனாய்வு உதியோகத்தர் எம் சலீம் மற்றும் முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் மதுசாங்க உள்ளிட்டோர் அடையாளம் காணப்பட்டனர்.
ஆயினும் 10 வருடங்களின் பின்னர் மேற்படி வழக்கில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட பிள்ளையான் உள்ளிட்டோர் 2015ஆம் ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கைது செய்யப்பட்டனர்.
ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில், வாக்கு மூலம் ஒன்றைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 2015 ஒக்டோபர் 11ஆம் திகதி அழைக்கப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசசத்துரை சந்திரகாந்தன், வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பிள்ளையானை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இடைப்பட்ட காலங்களில் பிள்ளையான் தரப்பில் பல தடவை பிணைகோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும், அந்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, சிறையில் இருந்தவாறே கடந்த பொதுத் தேர்தலில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிள்ளையான், வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.
இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிள்ளையான் நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர் நாடாளுமன்ற அமர்விலும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்வதற்கு பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
சிறையில் இருந்தவாறே 'வேட்கை' எனும் தலைப்பில் புத்தகமொன்றை பிள்ளையான் எழுதி வெளியிட்டுள்ளார்.
விடுதலை புலிகள் அமைப்பில் தனது 15ஆவது வயதில், சிறுவர் போராளியாக இணைந்த பிள்ளையான், 14 வருட காலம் அந்த அமைப்பில் ஆயுதப் போராளியாகச் செயல்பட்டார். பின்னர் புலிகள் அமைப்புக்குள் 2004ஆம் ஆண்டு உருவான பிளவினை அடுத்து, அந்த அமைப்பிலிருந்து விலகினார்.
அதன் பிறகு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.