தீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2020 (சனிக்கிழமை)
தீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தமிழ் முழக்கம் சாகுல் அமீது (60 வயது) சற்றுமுன்னதாக திடீரென உயிரிழந்துள்ளார்.தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியப் பரப்பில் 35 ஆண்டுகளுக்கு மேலான காலம் அதி தீவிரமாக செயல்பட்டு வந்ததுடன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீதும், ஈழத்தமிழர் மீதும் தீராத பற்றுறுதியுடன் இருந்து வந்த சாகுல் அமீது அவர்கள் சற்று முன்னதாக உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 2002ம் ஆண்டு கிளிநொச்சியில் சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியிருந்தார். அம்மாநாட்டில் தேசியத் தலைவர் வழங்கிய நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, ‘பொடா‘ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 17 மாதங்கள் சிறைக்கொட்டடியில் அடைபட்டிருந்தார்.
அதே ஆண்டின் தொடக்கத்தில் ஐயா பழ.நெடுமாறன் எழுதிய, ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், பல்வேறு தமிழ்த்தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார்.
தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் இருந்த தணியாத பற்றினால் பாரிய இழப்புகளைச் சந்தித்தபோதும் அதனைத் துளியும் பொருட்படுத்தாது தமிழ்த்தேசியக் களத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் பேராளுமை.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். இராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு விசாரிக்கப்பட்ட மிக முக்கியத் தமிழ்த் தேசியவாதிகளில் சாகுல் அமீதும் ஒருவர்.
நாம் தமிழர் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். காவிரி உரிமை மீட்புப் போராட்டம், மீத்தேன்-ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரானப் போராட்டங்கள் உள்ளிட்ட மண்ணின் உரிமைகளுக்கானப் போராட்டங்களிலும் தமிழர் வாழ்வாதாரப் போராட்டங்களிலும் நாம் தமிழர் கட்சியை முன்னின்று நடத்தியவர்.
மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று கட்சி கட்டமைப்புப் பணிகளில் திறம்பட செயலாற்றியவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி நாம் தமிழர் கட்சிக் கொள்கைகளைப் பரப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.