உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கதிகலங்கிப் போயுள்ளன.
சீனாவை விட ஐரோப்பிய நாடுகள் பல கடுமையாக பாதிகப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் மரணமடைந்தார் என்ற தகவலை அவரது சகோதரர் வெளியிட்டுள்ளார்.
உலகில் கொரோனா பாதிப்புக்கு பலியாகும் முதல் அரச குடும்பத்து உறுப்பினர் இவர் என கூறப்படுகிறது.
இளவரசி மரியா தெரசாவின் மறைவு அரச குடும்பத்து உறுப்பினர்களை மொத்தமாக உலுக்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் இதுவரை 72 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5,812 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,529 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 674 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசி மரியா தெரசா பாரிஸ் நகரில் 1933 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்த வார தொடக்கத்தில் பிரித்தானிய இளவரசர் சார்லஸ் தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள நிலையில், தற்போது ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா சிகிச்சை பலனின்றி இறந்த தகவல் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மொனாக்கோவின் இளவரசர் 62 வயதான ஆல்பர்ட் தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.