தேர்தல் கமிஷன், நேற்று நடத்திய வேட்டையில், திருப்பூர் மாவட்டத்தில், மூன்று, 'கன்டெய்னர்' லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட, 570 கோடி ரூபாய் சிக்கியது. இது, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமான பணமா என, விசாரணை நடந்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர், பணம் வழங்குவதை தடுக்க, மாநிலம் முழுவதும், பறக்கும் படையினர், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் வடக்கு தொகுதி, கலால் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, பெருமாநல்லுார் - குன்னத்துார் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு, 'இன்னோவா' கார்களையும், அவற்றைத் தொடர்ந்து வந்த மூன்று, கன்டெய்னர் லாரிகளையும் நிறுத்தும்படி சைகை செய்தனர். அந்த வாகனங்கள் நிற்காமல் பறந்தன. உஷாரடைந்த குழுவினர், சினிமா பாணியில், 7 கி.மீ., வரை துரத்திச் சென்று, செங்கப்பள்ளி அருகே கன்டெய்னர் லாரிகளை மடக்கிப் பிடித்தனர்.
சாதாரண உடை: கார்களில் இருந்து இறங்கியவர்களில் சிலர், போலீஸ் சீருடையிலும், சிலர் சாதாரண உடையிலும் இருந்தனர். தாங்கள் ஆந்திர போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் எனக் கூறி, அடையாள அட்டைகளை காண்பித்தனர். கோவை, பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, விசாகப்பட்டினம், பாலாஜி நகர், ஸ்ரீபுரம் சந்திப்பில் உள்ள வங்கிக்கு, சட்டப்படி, 570 கோடி ரூபாயை கொண்டு செல்வதாகக் கூறி, ஆவணங்களை காண்பித்தனர்.
இதையடுத்து, திருப்பூர் எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர், போலீஸ் துணை கமிஷனர் திஷா மிட்டல், தேர்தல் அலுவலர் முருகேஷ் ஆகியோர், வங்கி அதிகாரி சூரி ரெட்டியிடம் விசாரித்தனர். ஆவணங்களை வாங்கி சரிபார்த்தபோது, முரண்பாடு இருந்ததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாலை, 2:45 மணியளவில், பணத்துடன் கன்டெய்னர் லாரிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
'பிடிபட்டது, 570 கோடி' என, தகவல் பரவியதால், பணத்தை பார்க்க, ஏராளமான பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.போலீஸ் துணை கமிஷனர் தங்கவேல் தலைமையிலான போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்; ஒவ்வொரு நடவடிக்கையும், 'வீடியோ'வில் பதிவு செய்யப்பட்டது.
பிடித்தது எப்படி?:கண்காணிப்புக் குழு அலு வலர் விஜயகுமார் கூறியதாவது: பெருமா நல்லுார்- - குன்னத்துார் சாலையில், நள்ளிரவு, 12:30 மணிக்கு, சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில், கன்டெய்னர் லாரிகள் வந்தன. அவை வழக்கமான சாலையில் வராமல், சர்வீஸ் சாலையில் வந்ததால், சந்தேகம் அடைந்து நிறுத்தும்படி, சைகை காட்டினோம்; வாகனங் கள் நிற்கவில்லை.
உயரதிகாரி களுக்கு தகவல் தெரிவித்த பின், வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்தோம். சரியான ஆவணம் இல்லாததால், வாகனத் துடன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
காரில் வந்தவர்கள், ஆந்திர போலீசார் எனக் கூறி, அடையாள அட்டையை காண்பித்தனர்; யாருமே சீருடையில் இல்லை. அவர்களிடம் இருந்த ஆவணங்களும், சரிவர இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.
விசாகப்பட்டினம் வங்கி அதிகாரி சூரிரெட்டி கூறுகையில், : ''வழக்கமான நடைமுறைப்படி, ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்று, 570 கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்படுகிறது. பணம் கொண்டு செல்லப்படும் வாகனங்களை, எக்காரணம் கொண்டும் வழியில் நிறுத்தக்கூடாது என்பது விதி. அதன்படியே, நாங்களும் பயணித்தோம். ஆவணங்கள் அனைத்தும் சரியானவை என, நிரூபித்த பின், பணத்தை மீட்டுச் செல்வோம்,'' என்றார்.
விசாரணை குழு அமைப்பு: திருப்பூர் கலெக்டர் ஜெயந்தி கூறியதாவது: சோதனையின் போது சரியான ஆவணங்கள் இல்லாதது; பண வழிக்காவல் பணியில் இருந்த போலீசார், சீருடையில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், பணம் பறிமுதல் செய்யப் பட்டது. வாகனங்களின் எண்களுக்கும், ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த எண்களுக்கும் முரண்பாடு உள்ளது.
எனவே, இவ்வளவு பெரிய தொகையை ஒப்படைத்து அனுப்பிய அதிகாரி, பணத்தை பெற்றுச் செல்லும் அதிகாரிகளிடம் விசாரித்த பின் முடிவு செய்யப்படும். இதுகுறித்து, மாநில தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுக்கப் பட்டுள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமை யில், வருமான வரித்துறை, வருவாய் துறை, போலீஸ், மாவட்ட கருவூலத் துறை, மாவட்ட வங்கி யாளர்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள் ளது. இந்தக் குழு சம்பந்தப்பட்டோரிடம் விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கைக்குப் பின், பணம் விடுவிக்கப்படும் அல்லது கருவூலத்தில் சேர்க்கப்படும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
ஆந்திர போலீஸ் கூறுவது என்ன?:ஆந்திர போலீசார் கூறியதாவது:கோவை, பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, விசாகப்பட்டினம் கிளைக்குச் சென்ற பணத்துக்கு, பாதுகாப்பாக நாங்கள் வந்தோம். நேற்று முன்தினம் இரவு உணவை முடித்த பின், 11:00 மணிக்கு கிளம்பினோம். எங்களது உயரதிகாரிகள் உத்தரவுப்படி, மூன்று கன்டெய்னர்களுக்கு முன்னும், பின்னும் தலா, ஒரு காரில் ஆயுதம் ஏந்தியபடி வந்தோம். வழியில் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
'எங்களது பணம் தான்'எஸ்.பி.ஐ., மேலாளர் உறுதி: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், பாலாஜி நகரில் உள்ள, பாரத ஸ்டேட் வங்கி, கரன்சி நோட்டு நிர்வாக சிறப்பு பிரிவு மேலாளர் பூர்ணசந்திர ராவ் கூறியதாவது:
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, 77 கிளைகளுக்கு தேவையான கரன்சிகளை வினியோகிப் பது, எங்கள் சிறப்புப் பிரிவின் பணி. எங்களுக்கு கரன்சி நோட்டுகள் தேவை ஏற்பட்டது. எஸ்.பி.ஐ., யை பொறுத்தவரை, நாடு முழுவதிலும் உள்ள வங்கி கிளைகளின் வசம் உள்ள கரன்சியின் அளவை, 'ஆன்லைன்' மூலம் அதிகாரிகள் அறிய முடியும்.
அவ்வாறு பார்த்த போது, கோவை நகரில் உள்ள கிளையில், ரொக்கம் கூடுதலாக இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, ஆந்திர வட்டார ரிசர்வ் வங்கியிடம், எங்களது கோரிக்கையை தெரிவித்து, கோவை மேலாளரை மார்ச் மாதம் தொடர்பு கொண்டு, எங்களது பணத் தேவை குறித்து தெரிவித்தேன்.
அவரும், உயர் அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் அனுமதியை பெற்றார். அதன் பின், விசாகப்பட்டினம் நகர காவல் துறையைச் சேர்ந்த போலீசார், மூன்று ஜீப்களில், கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன், சூரி ரெட்டி என்ற ஊழியரையும் உரிய ஆவணங்க ளோடு அனுப்பி வைத்தோம்.
இந்த பணப் பரிமாற்றத்திற்காக, முறையாக அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். இது, ஒரு வழக்கமான நடைமுறை தான். தேர்தல் நேரம் என்பதால் பரபரப்பாகியுள்ளது. கடந்த மாதம் கூட சென்னை, அம்பத்துார் கிளையில் இருந்து பணத்தை பெற்றோம். பணத்தை பெறுவதற்காக உரிய நடவடிக்கை களை மேற்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வுக்கு பின் முடிவு ராஜேஷ் லக்கானி பேட்டி:தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:பிடிபட்ட பணம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு உரியது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணம் எடுத்துச் சென்றவர்கள், ஆவணங்களின் ஒரிஜினலை எடுத்துச் செல்லாமல், நகலை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் பாதுகாப் பிற்கு சென்றவர்கள், சீருடையில் இல்லாமல் இருந்துள்ளனர்.
இதனால் சந்தேகம் ஏற்பட்டு, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி அதிகாரிகளிடம், ஆவணங்களை கொண்டு வரும்படி கூறியுள்ளோம். ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பின், அவை சரியாக இருந்தால், பணம் விடுவிக்கப்படும்.இவ்வாறு லக்கானி தெரிவித்தார்.
யாரும் உரிமை கோரவில்லை:'பறிமுதல் செய்யப்பட்ட, 570 கோடி ரூபாய்க்கு, உரிமை கொண்டாட, வேறு எந்த நிறுவனமும் முன்வரவில்லை' என, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரத ஸ்டேட் வங்கி, கோவை கிளையில் இருந்து, விசாகப்பட்டினம் கிளைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பிக்க வில்லை. வேறு எந்த நிறுவனமும், பணத்திற்கு உரிமை கொண்டாட முன் வரவில்லை. இதனால், பணம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.