பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை ருசித்தது.
44–வது லீக் ஆட்டம்
9–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 44–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்–குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின.
சுரேஷ்ரெய்னா ஆடவில்லை
ஐ.பி.எல். போட்டியில் தொடர்ச்சியாக 143 ஆட்டங்களில் ஆடிய சுரேஷ்ரெய்னா முதல்முறையாக நேற்று ஆடவில்லை. அவருக்கு பதிலாக அக்ஷ்தீப் நாத் குஜராத் அணியில் சேர்க்கப்பட்டார். சுரேஷ்ரெய்னா ஆடாததால் பிரன்டன் மெக்கல்லம் குஜராத் அணியின் கேப்டன் பொறுப்பை கவனித்தார். பெங்களூரு அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
‘டாஸ்’ ஜெயித்த குஜராத் அணியின் பொறுப்பு கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்ல், கேப்டன் விராட்கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். கெய்ல் 6 ரன்னில் (13 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) தவால் குல்கர்னி பந்து வீச்சில் போல்டு ஆகி வழக்கம் போல் ஏமாற்றம் அளித்தார்.
டிவில்லியர்ஸ், விராட்கோலி சதம்
இதைத்தொடர்ந்து டிவில்லியர்ஸ், விராட்கோலியுடன் இணைந்தார். இருவரும் குஜராத் அணி வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளி ரன் குவித்தனர். அடிக்கடி சிக்சர்கள் பறந்தன. இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் குஜராத் அணி பவுலர்கள் திணறினார்கள்.
அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் 43 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சருடன் சதத்தை எட்டினார். இது ஐ.பி.எல். போட்டியில் 5–வது அதிவேக சதமாகும். அடுத்து கேப்டன் விராட்கோலி 53 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் சதத்தை கடந்தார்.
248 ரன்கள் குவிப்பு
அதிரடியாக ஆடிய விராட்கோலி 55 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 109 ரன்கள் எடுத்த நிலையில் பிரவீன்குமார் பந்து வீச்சில் வெய்ன் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட ஷேன் வாட்சன், பிரவீன்குமார் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ‘டக்–அவுட்’ ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 52 பந்துகளில் 10 பவுண்டரி, 12 சிக்சருடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். குஜராத் அணி தரப்பில் பிரவீன்குமார் 2 விக்கெட்டும், குல்கர்னி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். அதிகபட்சமாக ஷிவில் கவ்ஷிக் 3 ஓவர்கள் வீசி 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
பெங்களூரு அணி சாதனை வெற்றி
பின்னர் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆடிய குஜராத் அணி 18.4 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதனால் பெங்களூரு அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் 37 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 21 ரன்னும், பிரன்டன் மெக்கல்லம் 11 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினார்கள். பெங்களூரு அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டும், யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டும், சச்சின் பேபி 2 விக்கெட்டும், ஸ்ரீநாத் அரவிந்த் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
11–வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 5–வது வெற்றியை ருசித்தது. 12–வது ஆட்டத்தில் விளையாடிய குஜராத் அணி சந்தித்த 5–வது தோல்வி இதுவாகும்.
3,000 ரன்னை கடந்தார், டிவில்லியர்ஸ்
* நேற்றைய போட்டியில் ஆட்டம் இழக்காமல் 129 ரன்கள் குவித்த பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் ஐ.பி.எல். போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 9–வது வீரர், 3–வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். 115–வது ஆட்டத்தில் ஆடிய டிவில்லியர்ஸ் 3,108 ரன்கள் எடுத்துள்ளார். ஐ.பி.எல். ரன் குவிப்பில் சுரெஷ்ரெய்னா (3,985 ரன்கள், 143 ஆட்டங்களில்) முதலிடத்தில் இருக்கிறார். விராட்கோலி (3,814 ரன்கள், 134 ஆட்டங்களில்) 2–வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். வெளிநாட்டு வீரர்களில் கெய்ல், டேவிட் வார்னர் ஆகியோர் ஏற்கனவே 3 ஆயிரம் ரன்களை கடந்து இருக்கிறார்கள்.
* பெங்களூரு அணி வீரர்கள் டிவில்லியர்ஸ், விராட்கோலி ஆகியோர் நேற்று சதம் கண்டு அசத்தினார்கள். ஐ.பி.எல். போட்டியில் ஒரு இன்னிங்சில் 2 வீரர்கள் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். 20 ஓவர் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 2 வீரர்கள் சதம் அடித்தது இது 2–வது நிகழ்வாகும். 2011–ம் ஆண்டு கவுண்டி போட்டியில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் (119 ரன்கள்), நியூசிலாந்து வீரர் ஹமிஷ் மார்ஷல் (102 ரன்கள்) ஆகியோர் ஒரே இன்னிங்சில் சதம் அடித்து இருந்தனர்.
* பெங்களூரு அணி குவித்த 248 ரன்கள் ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் எடுக்கப்பட்ட 2–வது அதிகபட்ச ஸ்கோராகும். 2013–ம் ஆண்டில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.
* இந்த சீசனில் விராட்கோலி அடித்த 3–வது சதம் இதுவாகும். புனே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 108 ரன்னும், குஜராத் அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 100 ரன்னும் விராட்கோலி எடுத்து இருந்தார். ஐ.பி.எல். போட்டியில் ஒரே சீசனில் ஒரு அணிக்கு எதிராக 2 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் விராட்கோலி தனதாக்கினார். இந்த சீசனில் இதுவரை 6 சதங்கள் பதிவாகி இருக்கின்றன.
* 2–வது விக்கெட்டுக்கு விராட்கோலி–டிவில்லியர்ஸ் இணை 229 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது. ஐ.பி.எல். போட்டியில் ஒரு இணை ஆட்டத்துக்கு திரட்டப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
* பெங்களூரு அணி கடைசி 5 ஓவர்களில் 112 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவரில் எந்தவொரு அணியும் 100 ரன்களுக்கு மேல் எடுத்தது கிடையாது. குஜராத் அணி வீரர்கள் வெய்ன் பிராவோ 18–வது ஓவரில் 30 ரன்னும், ஷிவில் கவ்ஷிக் 19–வது ஓவரில் 30 ரன்னும் வாரி வழங்கி மோசமான சாதனை படைத்தனர்.
* விராட்கோலி–டிவில்லியர்ஸ் இணை இந்த சீசனில் 4 முறைக்கு மேல் 100 ரன்களுக்கு மேல் திரட்டி இருக்கிறார்கள். குஜராத் அணிக்கு எதிரான இதுவரை 4 சதங்கள் அடிக்கப்பட்டு இருந்தது. ஒரு சீசனில் எந்தவொரு அணிக்கு எதிராகவும் 2 சதங்களுக்கு மேல் அடிக்கப்பட்டதில்லை.
* பெங்களூரு அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் கண்ட இந்த வெற்றி ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் ஒரு அணி பெற்ற வெற்றியாகும். இதற்கு முன்பு 2008–ம் ஆண்டில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாக இருந்தது.