பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2019 (வெள்ளிக்கிழமை)
பிரிட்டனில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 650 இடங்களில், 365 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 203 இடங்களில் தொழிலாளர் கட்சியும், ஸ்காடிஷ் தேசிய கட்சி 48 இடங்களிலும், தாராளவாத ஜனநாயகவாதிகள் அமைப்பு 11 இடங்களிலும்,டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் பிற கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1987ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
அதேபோல் 1935ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தான் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதுடன், தனக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நடந்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளார். இதையடுத்து, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை அவரது மாளிகையில் சந்தித்த போரிஸ் ஜான்சன், பிரிட்டனில் ஆட்சி அமைப்பதற்கு முறைப்படி உரிமை கோரினார்.
இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழிநடத்தப்போவதில்லை என தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோபைன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தங்கள் கட்சியின் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் பிரெக்ஸிட் பிரச்சனையால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஜெர்மி கோபைனின் தலைமை மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
வந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின்படி, தொழிலாளர் கட்சியின் வலுவான பகுதிகளாக கருதப்படும் வடக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றில் தொழிலாளர் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த பகுதிகள் 2016ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று வாக்களித்த பகுதிகள்.
இது போரிஸ் ஜான்சனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக தெரிகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் ஒரு வரலாற்று தேர்தல் என்று குறிப்பிட்டுள்ள போரிஸ் ஜான்சன், "பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு ஒரு புதிய ஆதரவை இந்த தேர்தல் கொடுத்துள்ளது," என்று தெரிவித்தார்.
போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியா மற்றும் பிரிட்டன் மேலும் இணைந்து செயல்படுவது குறித்து தான் ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Many congratulations to PM @BorisJohnson for his return with a thumping majority. I wish him the best and look forward to working together for closer India-UK ties.