பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவான காலப்பகுதியே உள்ள நிலையில், ஊக்க மருந்து சர்ச்சை, விளையாட்டு உலகை உலுக்கி வருகிறது.
இப்பிரச்சனை காரணமாக கென்யாவைச் சேர்ந்த உலகின் பல முன்னணி தடகள வீரர்கள் அப்போட்டியில் பங்குபெற முடியாத நிலை ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.ஊக்க மருந்து பரிசோதனை தொடர்பில், கென்யா சர்வதேச நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு ‘வாடா’ கூறியுள்ளது.
விளையாட்டில் மோசடிகளை எதிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஆதாரத்துடன் காண்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இரண்டு காலக்கெடுக்களை கென்யா நிறைவேற்றவில்லை என வாடா சுட்டிக்காட்டுகிறது.கனடாவில் மொண்ட்ரியோல் நகரில் கூடும் வாடா அமைப்பின் செயற்குழு கூட்டத்தில், தமது வழிகாட்டு நெறிமுறைகளை கென்யா பின்பற்றவில்லை எனத் தீர்மானத்தை வாடா நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நடைமுறைகளை கென்யா பின்பற்ற வேண்டும் அல்லது தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என கென்யாவுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.கடந்த மாதம் கென்யா ஊக்க மருத்து பயன்பாட்டுக்கு எதிரான தேசியச் சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனாலும் அச்சட்டம் வாடா எதிர்பார்ப்புகளை முற்றாக திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனக் கருதப்படுகிறது.
ஊக்க மருந்து பரிசோதனைகளை தொடர்பான வாடா நெறிமுறைகளை கென்யா பின்பற்றவில்லை என அந்த அமைப்பின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ள கருத்துக்களை உயர்மட்ட செயற்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கும் என பிபிசி அறிந்துள்ளது.அப்படி நடைபெற்றால் கென்யாவின் பல முன்னணி தடகள வீரர்கள் ரியோ போட்டியில் பங்குபெற இயலாமல் போகலாம்