யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதிகளிலும் வட மாகாணத்தில் காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்துள்ள ஆணைக்குழு, எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. அதன் பின்னர் குறித்த தரவுகளை ஆராய்ந்து இம்மாத இறுதிக்குள் சரியான எண்ணிக்கையை வெளியிட எதிர்பார்ப்பதாக, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்துள்ளார்.
மேலும், மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டவர்கள், காணாமல் போனோரின் பட்டியலிலிருந்து நீக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில், ஒருவர் குறித்து ஒன்றிற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதோடு, சிலர் வேறு நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும், சரியான எண்ணிக்கை தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்க முடியாதென ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.