பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு: "சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்"
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2019 (திங்கட்கிழமை)
அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரையில் திங்கள்கிழமை நடந்த விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், தாம் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயவின் சகோதரருமான மஹிந்தவின் பிறந்தநாள் இன்று என்பதால் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆகியுள்ள கோட்டாபய தமது பதவியேற்பின்போது ஆற்றிய உரையில்,
தமிழர்களின் வாக்குகளையும் தான் எதிர்பார்த்த போதிலும், தான் எதிர்பார்த்தளவு தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று கூறினார்.இனிவரும் காலங்களிலாவது தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழர்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தனது முதலாவது திட்டம் எனவும் அவர் கூறினார்.சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற, லஞ்ச ஊழல் அற்ற ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.அத்துடன் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு வெளிநாடுகளிடம் கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.
யார் இந்த கோட்டாபய ராஜபக்ஷ?
இலங்கையின் யுத்த காலத்தில் அதிகமாக முணுமுணுக்கப்பட்ட பெயர் கோட்டாபய ராஜபக்ஷ. இலங்கையை கடந்து சர்வதேச அளவில் அந்தப் பெயர் உச்சரிக்கப்பட்டது. இலங்கை போரை அரசு சார்பில் முன்னெடுத்தவர் கோட்டாபய.
இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய எனும் பகுதியில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் தேதி அரசியல்வாதியான டி.ஏ.ராஜபகஷ தம்பதியினருக்கு நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் சகோதரனாக கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.
1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கேடட் அதிகாரியாக இலங்கை ராணுவத்தில் இணைந்து, தனது ராணுவ பயணத்தை கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ஷ 1972ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி இலங்கை ராணுவத்தின் இரண்டாம் நிலை லெப்டினனாக பதவிவுயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்தின் ஸ்ரீலங்கா சிங்ஹ ரெஜிமென்ட், ரஜரட்ட ரயிபைல்ஸ் ஆகிய படைப்பிரிவுகளில் கடமையாற்றிய அவர், 1983ஆம் ஆண்டு ராணுவத்தின் கஜபா ரெஜிமென்ட்டில் இணைந்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ, தனது 20ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் இலங்கை ராணுவத்திற்காக ஆற்றிய சேவைக்காக அந்த காலப் பகுதியில் ஆட்சி பீடத்தில் இருந்த மூன்று ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன், ரணசிங்க பிரேமதாஸ மற்றும் டி.பி.விஜேதுங்க ஆகியோரிடம் விருதுகளையும் பெற்றுள்ளார்.
1983ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலப் பகுதியில் இலங்கை ராணுவத்தில் முன்னின்று கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தின் பல பிரிவுகளில் கட்டளை தளபதியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்புத் துறையில் பல உயரிய பதவிகளை வகித்த அவர், 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
இலங்கை ராணுவத்திலிருந்து 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, அந்த காலப் பகுதியிலேயே அமெரிக்காவிற்கு குடியேறி அமெரிக்க பிரஜை உரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை மற்றும் அமெரிககா என்று இரட்டை பிரஜை உரிமையை பெற்றவராக கோட்டாபய ராஜபக்ஷ திகழ்ந்தார்.
தனது சகோதரனான மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, அமெரிக்க பிரஜை உரிமையை பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை நோக்கி மீண்டும் வருகைத் தந்தார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ, அந்த ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார்.
உள்நாட்டு யுத்தம் வலுப் பெற்றிருந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படுகின்றார்.