அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்தாவின் பிறந்தநாள் நாளை என்பதால் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய தாம் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டார். தமது தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், இரண்டாமிடம் பெற்றவருமான சஜித் பிரேமதாச அறிவித்தார்.
தமிழர்கள்- முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பெருவாரியான வாக்குகள் முன்னிலை பெற்றார் சஜித் பிரேமதாச.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக ட்விட்டரில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டுள்ளார்.
"இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கும், அதன் குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்" என்று தனது ட்விட்டர் பதிவில் நரேந்திர மோதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் அறிக்கை
இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்.
விசேட அறிக்கையொன்றின் ஊடாகவே சஜித் பிரேமதாஸ இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக எதிர்கொண்ட தோல்வியை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக எண்ணியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தான் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது 26 வருட அரசியல் வாழ்க்கையில் தன்னுடன் பயணித்த ஆதரவாளர்களுக்கும் சஜித் பிரேமதாஸ இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார்.
சுதந்திரமாகவும், நீதியானதுமான தேர்தலை நடத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேர்தல் ஆணைக்குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தனது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் தான் விரைவில் மக்களுக்கு தெளிவூட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகும் அமைச்சர்
ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள பின்னணியில், அந்தக் கட்சியைச் சேர்ந்த இலங்கை தொலைத் தொடர்புத் துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் ஃபெர்ணான்டோ மக்கள் தீர்ப்பை மதித்து தாம் தமது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தம்மை இதுவரை ஆதரித்துவந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், "இதுவரை செய்யப்பட்ட நல்ல பணிகள் தொடரும்" என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பதவிகளை ராஜிநாமா செய்கின்றமை நகைச்சுவைான விடயம் - அமைச்சர் மனோ கிண்டல்
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து சில அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்தமையானது, நகைச்சுவையான செயற்பாடாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹரீன் பெனாண்டோ மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் தமது, அமைச்சுப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 'நாளை புதிய பிரதமர் பதவி ஏற்கும் போது, எல்லா அமைச்சரவை அமைச்சர்களும் பதவி இழப்பர். அதுவே ஜனநாயக சம்பிரதாயம். இந்நிலையில் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது என்பது நகைச்சுவையானதாகும்' என்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆரவளித்து செயற்பட்ட அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிளார் பதவியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் கபீர் ஹாசிம் ராஜிநாமா செய்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்து வந்த பிரதித் தலைவர் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
"அமைதியாக கொண்டாட்டம்" கோட்டாபய அறிக்கை
"இலங்கைக்கான புதிய பயணம் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து இலங்கையர்களும் இந்தப் பயணத்தின் அங்கமாக இருப்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். பிரசாரத்தில் ஈடுபட்டதைப் போன்றே அமைதியாகவும், கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும் நாம் கொண்டாடலாம்" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ. அந்த அறிக்கையை அவர் தமது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
தமிழர் பகுதியில் சஜித் அபார முன்னிலை - தெற்கில் கோட்டாபய முன்னிலை
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிற பல தொகுதிகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை பெற்று வந்தாலும், தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். வடக்கு மாகாணத்தில் கோட்டாபாய ராஜபக்ஷவைவிட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
கோட்டாபயவுக்கு ஆதரவாக தமிழர் கட்சிகள் சில மேற்கொண்ட நிலைப்பாடு, அவருக்கு ஆதரவாக தமிழர் வாக்குகளைப் பெற்றுத் தருவதற்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.