புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது : பிரதமர் ஜோன்சன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2019 (வியாழக்கிழமை)
இந்நிலையில் கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் புதிய ஒப்பந்தம் ஒன்று எங்களுக்கு கிடைத்துள்ளது என பிரதமர் ஜோன்சன் சற்று முன்னர் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் ஒரு புதிய புதிய ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது. வரும் சனிக்கிழமையன்று பிரெக்ஸிற் திட்டம் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
அதன் பின்னர் வாழ்க்கைச் செலவு, தேசிய சுகாதார சேவை, வன்முறைக் குற்றம் மற்றும் நமது சூழல் போன்ற ஏனைய விடயங்களுக்கு நாம் முன்னுரிமை வழங்க முடியுமென பிரதமரின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்று எட்டப்பட்டு விட்டதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜீன் குளோட் ஜங்கரும் தனது ருவிற்றர் பக்கத்தில் சற்றுமுன்னர் பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கான நியாயமான மற்றும் சீரான ஒப்பந்தம் இதுவாகும். இது தீர்வுகளைக் காண்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு சான்றாகும் என ஜங்கர்-இன் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் ஒப்பந்தத்தின் சட்ட உரையை உருவாக்குவதற்கு செயல்பட்டு வருகின்றனர், ஆனால் அதற்கு பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் அனுமதி தேவைப்படும்.