பலாலியில் ஒரு சர்வதேச விமான நிலையம் தன்னுடைய செயற்பாட்டை ஆரம்பிக்க இருக்கின்றது.
ஆட்லெறிகளும் பொம்மர்களும் புக்காராவும் மேல் கிளம்பிய குடாநாட்டின் வட. கோடியில் இருந்து சர்வதேச பயணங்களுக்கான விமானங்கள் மேல் கிளம்புவது மகிழ்ச்சியான செய்திதான்.
அதாவது வட. புலத்திற்கான புதிய வாசல் ஒன்று திறக்கப்பட்டிருக்கின்றது.
தற்போதைக்கு இந்திய நகரங்களில் இருந்துதான் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
சென்னையில் இருந்து வாரத்தில் ஏழு சேவைகளை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இவற்றை நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களும் நிறையவே இருக்கின்றன.
காலப்போக்கில் பல்வேறு விமான சேவை நிறுவனங்களும் பல்வேறு நாடுகளுகளில் இருந்தும் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பிப்பதில் ஆர்வம் காட்டும்.
மேற்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கட்டுநாயக்காவிற்கான பறப்பை மேற்கொள்கின்ற விமானங்களின் பயணப் பாதை யாழ்ப்பாணம் வான் பரப்பை அண்டியதாகவே அமைந்துள்ளது.
அவ்வாறு வருகின்ற விமானங்களில் கணிசமான பயணிகள் வடக்கை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணத்தில் தரையை தொட்டுவிட்டு வருவதால் விமான நிறுவனங்களுக்கு இரண்டு வகை நன்மைகள்.
ஒன்று, வடக்கு நோக்கி வருகின்றவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கலாம்.
அடுத்தது, விமானத்தின் பாரமே எரிபொருளின் அளவை தீர்மானிக்கின்றது. ஆகவே, கணிசமான பாரத்தை யாழ்ப்பாணத்தில் இறக்கிவிட்டு கட்டுநாயக்காவிற்கு பறப்பதன் மூலம் கணிசமான அளவு எரிபொருளை மீதப்படுத்தலாம் என்கின்றனர் விமான போக்குவரத்து சேவையில் அனுபவமுள்ளவர்கள்!
அதாவது பல ஆயிரம் டொலர்களை மீதப்படுத்தலாம்!
ஆக, வர்த்தக ரீதயில் விமான நிறுவனங்களுக்கு இரண்டு நன்மைகள். ஆனாலும் அது உடனடிச் சாத்தியமில்லை.
காரணம் தற்போது சர்வதேச சேவையில் பெருமளவில் பயன்படுத்தபடுகின்ற எயார் பஸ் மற்றும் போயிங் ரக விமானங்களை தரையிறக்குவதற்கு அண்ணளவாக 3000 மீற்றர் ஓடுபாதை அவசியம். ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஓடுபாதையின் நீளம் தற்போது 1400 மீற்றராக நீட்டப்பட்டுள்ளது.
தற்போதைய திட்டத்தின்படி இரண்டாம் கட்ட வேலைகளும் நிறைவடையும்போது ஓடுபாதையின் நீளம் 2300 மீற்றர் வரை நீண்டிருக்கும்.
எனவே தற்போதைக்கு பிராந்திய சேவைகள்தான் நடைபெறப்போகின்றன.
தொடர்ச்சியாக இதனை அபிவிருத்தி செய்து வட புலத்தின் பொருளாதார அபிவிருத்திக்கான பிரதான சர்வதேச வாயிலாக செதுக்க வேண்டிய பொறுப்பு எமது கைகளிலேயே இருக்கின்றது.
ஆனால், இங்கு பிராந்திய நலன்சார் விடயங்களும் இழையோடி இருப்பதால் பாரிய விமானங்களை நேரடியாக தரையிறக்கும் ஆசை நிறைவேற கொஞ்சம் பொறுக்க வேண்டியிருக்கும்.
“எமக்கு இருப்பது போதாது – எதையும் தருகிறார்கள் இல்லை” என்று ஆதங்கப்படுகின்றவர்கள் நாங்கள்!
ஆனால் கிடைத்தது எதையும் இதுவரை சரியாய் செதுக்கியதாய் தெரியவில்லை.
அண்மைய வரலாற்றை அரசியல் தீர்வுக்கான வாய்ப்புக்களை தவிர்த்து விட்டு புரட்டினால்கூட, இரணைமடு குடிநீர் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தந்த பல்லாயிரம் கோடிகளை உதறித் தள்ளியவர்கள் நாங்கள்.
வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த சாணக்கியர்கள் நாங்கள்!
இந்த திட்டத்தையும் எம்மிடம் தந்திருப்பார்களாயின் சாதக பாதகங்கள் தொடர்பாக புலமைசார் விவாதங்கள் நடத்தி திட்டத்தை தந்தவர்களை வெறுத்து ஓட வைத்திருப்போம். அந்தளவிற்கு கெட்டிக்காரர் நாங்கள்!
இந்தியாவின் பிராந்திய நலன்சார் நெருக்குதலும் அமைச்சர் அர்ஜினவின் ஆர்வமும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்ற வாயிலை உருவாக்கியிருக்கின்றது.
இந்த விமான நிலையம் ஏற்படுத்தியுள்ள உடனடிப் பயனாக சுமார் 350 தொடக்கம் 400 வரையான வேலை வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாக தெரிகின்றது.
அவற்றிற்கு முடியுமானவரை அந்த பிரதேச இளைஞர் யுவதிகள் நியமிக்கப்படுவதை தலைமைகள் உறுதிப்படுத்த வேண்டும்.
சில தொழில்சார் தகமையாளருக்கு எம்மத்தியில் வெறுமை இருப்பதால் அவ்வாறானவர்கள் தென்னிலங்கையி்ல் இருந்து கொண்டு வரப்படுவது தவிர்க்க முடியாதது. எனினும் எதிர்காலத்தில் எம்மவர்களை தகமையாளராக்கும் முயற்சிகள் முடுக்கப்பட வேண்டும்.
தற்போது சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டிருந்தாலும், உட்கட்டுமானம் சர்வதேச தரத்தில் இல்லை.. அடிப்படை வசதிகளே ஒழுங்குபடுத்தப்படிருக்கின்றன.
எனவே, இந்தியா போன்ற நாடுகளின் உதவிகளை மேலும் உள்ளீர்த்து உட்கட்டுமானங்களை விரிவுபடுத்தி அடுத்தடுத்த தரநிலைக்கு யாழ். சர்வதேச விமான நிலையத்தை கொண்டு செல்வதில் நமது தலைமைகளுக்கு பொறுப்பு இருக்கின்றது.
திறக்கப்பட்டிருக்கும் இந்த வாசலின் ஊடாக, நுழைய முற்படும் முதலீடுகளை வசீகரிக்கும் திட்டங்கள் எம்மிடம் தாராளமாய் இருக்க வேண்டும்.
சுற்றுலா துறை தொடர்பாகவும் கொஞ்சம் விசாலமாய் சிந்திக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் எமது கலாசார பண்பாட்டு வேலிகள் எமது தனித்துவங்களை சிதறடிக்காத வகையில் விசாலப்படுத்தப்பட வேண்டும்.
ஆக, கிடைத்திருக்கின்ற வடக்கிற்கான வாசலை பயன்படுத்தி வாய்ப்புக்களையும் வளங்களையும் உள்ளீர்க்கும் பொறிமுறை எமக்கு அவசியமான வரமாக இருக்கின்றது.
இந்நிலையில், உலகெங்கும் பரவி நிற்கும் எம் ஆளுமைகளும் செழித்து நிற்கும் உறவுகளும் நம்பிக்கையோடு உள் நுழைவார்கள் என்று நம்புவோமாக..