தேர்தல் கமிஷன் வேட்டையில் சிக்கியது ரூ.100 கோடி சதமடிப்பு! எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகம் 'சாதனை!
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2016 (வியாழக்கிழமை)
தேர்தல் கமிஷன் வேட்டையில், இதுவரை சிக்கிய பணம், 100 கோடி ரூபாயை தொட்டுள்ளது. சிக்காத பணம், சில ஆயிரம் கோடிகளை தாண்டும் என கணக்கிடப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தேர்தல் பணப் பட்டுவாடாவில், தமிழகம் சாதனை படைத்துள்ளதையே இது காட்டுகிறது.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பணம் வினியோகத்தை தடுக்க, தேர்தல் கமிஷன், 144 தடையுத்தரவு பிறப்பித்தது. அது ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்தது.இம்முறை தவறு நடந்து விடக்கூடாது எனக் கருதிய தேர்தல் கமிஷன், நடத்தை விதி அமலுக்கு வந்ததும், ஒவ்வொரு தொகுதிக்கும், மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்புக் குழுவை நியமித்து, வாகன சோதனையை தீவிரப்படுத்தியது.
சிக்காத பணம் எவ்வளவு
மாவட்ட வாரியாக, வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய, 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், பணப் பரிவர்த்தனையை கண்காணித்தனர். அவர்கள், ஏப்., 22ம் தேதி முதல், சந்தேகிக்கப்பட்ட நபர்களின் வீடுகள், நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அதில், கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியது.தமிழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் கேரளாவில், 23 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்தில், 21 கோடி ரூபாயும் தான் இதுவரை பிடிபட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் பண நடமாட்டமும், பட்டுவாடாவும் இப்போதும் தொடர்கிறது.இதுவரை,100 கோடி ரூபாய் மட்டும் சிக்கியுள்ளது. ஆனால், சிக்காத பணம், சில ஆயிரம் கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது. சோதனையையும் மீறி, வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக, மாநிலம் முழுவதும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல், கட்சியினரை சென்றடைந்துள்ளது.
இன்றும், நாளையும் பணம் பட்டுவாடா அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைதடுக்க, பறக்கும் படை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:ஒவ்வொரு தொகுதியிலும், ஆரம்பத்தில் மூன்று பறக்கும் படை இருந்தது. தற்போது, 25 பறக்கும் படைகள் உள்ளன. மாநிலம் முழுவதும், 6,112 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.இரண்டு நாட்களில், பணம் வினியோகம் அதிகம் இருக்கலாம் என சந்தேகிப்பதால், மேலும் கூடுதலாக, 2,000 பறக்கும் படை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களும், இன்று முதல் ரோந்து பணியில் ஈடுபடுவர். எங்கு புகார் வந்தாலும், உடனடியாக சம்பவ இடத்திற்கு, அதிகாரிகள் பறந்து செல்வர்.
வாட்ஸ் ஆப்' தகவல் அனுப்பலாம்
பொது மக்கள் எதற்கெடுத்தாலும், எனது மொபைல் போனில் கூப்பிடுகின்றனர். நான் மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தாலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு, புகார் தெரிவித்தால் போதும். மாவட்ட கட்டுப்பாட்டு அறை புகார் எண்கள், தேர்தல் கமிஷன் இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளன.மேலும், 9444123456 என்ற எண்ணுக்கு, 'வாட்ஸ் ஆப்' தகவல் அனுப்பலாம். மாநில
கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அதிகாரியாக, மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அதிகாரியாக, துணை கலெக்டர் மற்றும், டி.எஸ்.பி., நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராணுவ வீரர்கள் இரவு ரோந்து
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, 30 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். அவர்களை இரவு ரோந்து பணிக்கு அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இன்று முதல், இரவு ரோந்து செல்ல உள்ளனர். கட்சி பாரபட்சமின்றி, யார் பணம் கொடுத்தாலும், அவர்கள் பிடிப்பர்.
முதலிடம் சென்னைக்கு
பணம் பறிமுதலில், சென்னை முதலிடத்தை பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில், அதிகபட்சமாக சென்னையில், 24.76 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 12.05 கோடி ரூபாய், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கரூர் மாவட்டத்தில், 8.93 கோடி ரூபாய் சிக்கியுள்ளது.
35லிருந்து 100க்கு
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தேர்தல் கமிஷன் நடவடிக்கையில், 35.53 கோடி ரூபாய் சிக்கியது. 2014 லோக்சபா தேர்தலில், 25.05 கோடி ரூபாய் சிக்கியது. ஆனால், இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் இம்முறை, 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.