உலக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்திடம் இலங்கை மோசமான தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2019 (சனிக்கிழமை)
இன்று சனிக்கிழமை, கார்டிஃப்பில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இரண்டாவதாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களிலேயே, ஒரு விக்கெட்டையும் இழக்காமல் 137 என்ற இலக்கை அடைந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்டில் 51 பந்துகளில் 73 ரன்கள் மற்றும் காலின் மன்றோ 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தனர்.
அணித்தலைவர் திமுத் கருணரத்னே ஆட்டமிழக்காமல் 84 பந்துகளில் 52 ரன்கள் எடுத்ததே இலங்கை அணிக்கு அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
இலங்கை அணியின் குசால் மெண்டிஸ், மேத்யூஸ் மற்றும் இசுரு உதான ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள்.
நியூசிலாந்து வீரர்கள் மேட் ஹென்றி மற்றும் பெர்குசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மூன்று முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி ஒரு முறை கோப்பையை வென்றுள்ள இலங்கை அணி, இந்த உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் இரண்டிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளிடமும் தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள நியூசிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அடுத்தபடியாக புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட இரண்டு அணிகளுமே ஒரே போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் முதலிடம் பிடித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஒருநாள் தொடரில் 3-0 என்று கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து.