மிகவும் பரபரப்பான இந்த போட்டியில், சிஎஸ்கே அணி கோப்பையை நிச்சயம் வெல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் கடைசி பந்துவரை, அதிக அளவில் ரன்களை வாரிவழங்கி அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லசித் மலிங்கா, ஒரேபந்தில் ஹீரோவானார்.
கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி, ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவருக்கு போட்டி செல்லும் என்ற நிலையில் மலிங்கா பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஷரதுல் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே சென்னை எடுத்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை வென்றது.
மிகவும் பரபரப்பான இந்த போட்டியில், ஒரு கட்டத்தில் ரெய்னா, ராயுடு மற்றும் தோனி என தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துவந்த சிஎஸ்கே அணிக்கு ஷேன் வாட்சன் பெரும் நம்பிகை அளித்தார்.
ரெய்னா, ராயுடு ஆட்டமிழப்பு
ராகுல் சாஹர் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் ரெய்னா ஆட்டமிழந்தார். தான் எல்பிடபுள்யூ முறையில் அட்டமிழந்ததாக நடுவர் அறிவித்ததை அடுத்து, அதனை மறு ஆராய்வு செய்ய ரெய்னா கோரிக்கை விடுத்தார். ஆனால், அதிலும் ரெய்னா அட்டமிழந்தது தெளிவாக தெரிய அவர் பெவிலியனுக்கு ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இதற்கு அடுத்த ஓவரில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் ராயுடு ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் 39 ரன்களுடன் ஷேன் வாட்சன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
குருனால் பாண்ட்யா வீசிய 4-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய டு பிளசிஸ் ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
அதை தொடர்ந்து ஷேன் வாட்சன் அதிரடியில் இறங்கினார். மலிங்கா வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசிய அவர், 23 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து, சிஎஸ்கே அணி வெற்றி பெற 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
ஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 13 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இது ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் துவங்கியவுடன் தெரிந்துவிடும்.
இறுதி ஓவருக்கு முந்தைய ஓவரில் பந்துவீசிய தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது மும்பை ரன் குவிப்பை பெரிதும் கட்டுப்படுத்தியது. இந்த ஓவரில் தீபக் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
மும்பை அணியின் போலார்ட் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஷரதுல் தாக்கூர் மற்றும் இம்ரான் தாஹீர் தலா இரண்டு விக்கெட்டுளை எடுத்தனர்.
ஷரதுல் தாக்கூர் வீசிய 18-வது ஓவரின் இரண்டாவது பந்தை ஹர்திக் பாண்ட்யா தூக்கியடிக்க, ரெய்னா அந்த கேட்சை தவறவிட்டார். இந்த ஓவரின் அடுத்த பந்துகளில் போலார்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர்.
இம்ரான் தாஹீர் அபாரம்
போட்டியின் 15-வது ஓவரில், நன்கு விளையாடிவந்த இஷான் கிஷன், இம்ரான் தாஹீரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
10 ஓவர்களுக்கு பிறகு சூர்யகுமார் யாதவ்-இஷான் இணை அதிரடி பாணியில் விளையாடியது.
முதல் 3 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன் சிங் தனது இறுதி ஓவரில் 10 ரன்களை கொடுத்தார். அவர் பந்துவீசிய 4 ஓவர்களில்மொத்தம் 27 ரன்கள் கொடுத்துள்ளார்.
தீபக் சாகர் வீசிய அடுத்த ஓவரில் ரோகித் சர்மா அடித்த பந்தை தோனி கேட்ச் பிடித்ததையடுத்து தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது மும்பை.
இதனால் 6-வது ஓவரின் இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் களமிறங்கினார். முதல் ஓவரில் நிதானமாக விளையாடிய மும்பை அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தீபக் சாஹர் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தை லெக்-சைடில் குயிண்டன் டி காக் சிக்ஸராக விளாசினார். மூன்றாவது பந்தும் சிக்ஸரானது. சிகரம் வைத்தாற்போல ஐந்தாவது பந்தை இமாலய சிக்ஸராக மாற்றினார் டி காக்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியை காண உலகெங்கிலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
கடந்த வாரத்தில் சென்னையில் நடந்த முதல் தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது.
புதன்கிழமையன்று நடந்த மிக பரபரப்பான எலிமினேட்டர் சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியை டெல்லி அணி வென்றது.
வெள்ளிக்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் நடந்த இறுதி போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல்லின் இரண்டு பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டி உட்பட, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றிப் பெற்றுள்ளது.
இது மும்பை அணி வீரர்களுக்கு உளவியல் ரீதியாக சாதகமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், அதேவேளையில் தோனி உள்பட ஏராளமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ள சிஎஸ்கே அணி, நடப்பு தொடரில் மூன்று முறை மும்பையிடம் தோற்றதற்கு இன்று பதிலடி தரும் என்று அதன் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி வென்றுள்ளது. அதேபோல் 2013, 2015 மற்றும் 2017 ஆகிய மூன்று முறையும் மும்பை அணி கோப்பையை வென்றுள்ளது.
இதுவரை நடந்த 11 ஐபிஎல் தொடர் இறுதி ஆட்டங்களில் 8 முறை 'டாஸ்' வென்ற அணியே கோப்பையை வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் டாஸ் வெல்லும் அணி போட்டியை வெல்ல வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.