வெல்ல போவது யார்? யாருக்கு எத்தனை இடங்கள்?: அனல் பறக்கும் உச்சகட்ட பிரசாரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2016 (வியாழக்கிழமை)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளன. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் அதீத நம்பிக்கையுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அரசியல் கட்சி தலைவர்களும் பிற கட்சிகளை குற்றம், குறை கூறுவதை குறைத்துக் கொண்டு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் எனக் கூறி ஓட்டு சேகரிக்க துவங்கி உள்ளனர்.
யாருக்கு வெற்றி? :
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போவது யார் என பல்வேறு கருத்து கணிப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. நாங்கள் தான் ஆட்சிக்கு வர போகிறோம்... எங்களின் வெற்றி உறுதியாகி விட்டது என கூறும் அரசியல் கட்சிகளும் அதற்காக ஆளுக்கொரு காரணத்தையும் கூறி வருகின்றன. ஆனால் உண்மையில், தமிழக தேர்தல் களம் முதல் முறையாக 6 முனை போட்டி காண்கிறது. இதனால் வாக்காளர்களின் தேர்வு யார் என்பதை துல்லியமாக கணிக்க முடியாமல் அரசியல் தலைவர்கள் முதல் அரசியல் ஆய்வாளர்கள் வரை சற்று குழப்பத்திலேயே உள்ளனர்.
யாருக்கு எத்தனை தொகுதிகள்? :
ஆளும் கட்சியான அதிமுக 234 தொகுதிகளிலும் தாங்கள் தான் வெற்றி பெற போவதாக கூறி, பிரசாரம் செய்து வருகிறது. முதல்வர் வேட்பாளரை முதலாவதாக அறிவித்த பாமக.,வோ தாங்கள் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க உள்ளதாக கூறி வருகிறது. மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ நேற்று திருச்சி கூட்டத்தில் பேசுகையில் தங்கள் கூட்டணி 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறி உள்ளார். தேசிய கட்சியான பா.ஜ.,வோ மக்கள் விரும்பும் மாற்றத்தை தங்கள் கட்சியால் மட்டுமே தர முடியும் என கூறி வருகிறது. ஆனால், பிரதான கட்சிகள் அனைத்தும் தனித்து போட்டியிடுவதால் ஓட்டுக்கள் பிரியும் என்பதே நிதர்சனமான உண்மை.
இறுதிக்கட்ட பரபரப்பு :
தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதால் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தல் கமிஷனும், தேர்தல் பறக்கும் படையினரும் தங்கள் பங்கிற்கு கெடுபிடியை அதிகப்படுத்தி வருகின்றனர். வாகன சோதனை மட்டுமின்றி, புகார் வரும் கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷனும், பண பட்டுவாடா செய்வதில் அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு வேலை செய்து வருகின்றன.