பெரிய நாடுகள், சிறிய நாடுகள் அனைத்தும் இதில் இணைந்திருப்பதாக தமது ட்வீட்டில் தெரிவித்துள்ள அவர், அதற்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
"மசூத் அஸாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா 2009ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது." என்று அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்க, பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் பல நாடுகள் இந்தியாவின் தீர்மானத்துக்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து நாடுகளுக்குமான வெற்றி இது. ஐ.நாவின் தடை விதிக்கும் குழுவின் தலைவர் இந்த முடிவினை அறிவித்தார்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.
புல்வாமா-வில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து மசூத் அஸாரை ஐ.நா. பயங்கரவாதியாக அறிவிக்கவேண்டும் என்று இந்தியா சர்வதேச முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், மசூத் அஸாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து, அவருக்கு தடை விதிப்பதற்கு ஐ.நா.வில் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் செய்த முன்மொழிவுக்கு கடந்த மார்ச் மாதம் சீனா முட்டுக்கட்டை போட்டது. சீனாவின் முட்டுக்கட்டையால் முன்னதாகவே இரண்டுமுறை இந்த முயற்சி முறியடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சீனா தமது ஆட்சேபனையை விலக்கிக்கொண்ட நிலையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளைக் கொண்ட கருப்புப் பட்டியலில் மசூத் அஸாரை சேர்த்துள்ளது ஐ.நா. என்று தூதர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா தமது தடையை விலக்கிக்கொண்டதா என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீனிடம் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கேட்டது. அதற்கு 'ஆம்' என்று அவர் பதில் அளித்துள்ளார்.
முறையாக இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் என்று தாம் நம்புவதாக சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கருத்து
மசூத் அஸார் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மொஹம்மது ஃபைசல்,
"கருப்புப் பட்டியலில் மசூத் அஸாரை சேர்க்கும் முன்மொழிவு, அதனை (அஸார் மீதான தடையை) புல்வாமா தாக்குதலோடு தொடர்புபடுத்துவது, இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள காஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமைக்கான சட்டப்படியான போராட்டத்தை களங்கப்படுத்துவது போன்ற அரசியல் குறிப்புகளை நீக்கிய பிறகே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை பெரிய வெற்றி என்று வருணித்தும், அதன் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் ஒன்றாகவும் ஓர் உரையாடலை கட்டமைக்க இந்திய ஊடகங்கள் முயல்கின்றன. இது முழுவதும் பொய்யானதும், அடிப்படை இல்லாததுமாகும். ஆனால், தடை செய்யப்பட்ட அமைப்புகளோ, அதனுடன் தொடர்புடையவர்களோ பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்பட இடமளிப்பதில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்த வழியிலேயே எங்கள் நிலைப்பாடு உள்ளது" என்று கூறியுள்ளார் ஃபைசல்.
என்ன சொல்கிறது சீனா
"மசூத் அஸாரை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க வேண்டும் என தொடர்புடைய நாடுகள் மறுஆய்வு செய்து தகவல்களை சமர்பித்தனர். அதை கவனமான ஆய்வு செய்து, மற்றும் தொடர்புடைய தரப்பை கருத்தில் கொண்டு சீனா இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை." என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கெங் ஷுவான் தெரிவித்துள்ளார்.
மேலும், "பயங்கரவாததிற்கு எதிரான போராடத்தில் பாகிஸ்தான் பெரும் பங்கை அளித்துள்ளது. சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்துக்கு பாகிஸ்தான் தகுதியுடைய நாடு. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும்." என்றும் அவர் தெரிவித்தார்.
யார் இந்த மசூத் அஸார்?
1980களில் ஆப்கன் சோவியத் போரில் மசூத் அஸாரின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. பின்னர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை தொடங்குகிறார். மற்ற அமைப்புகள் சோவியத் படைகளுக்கு ஆதரவாக சண்டையிட, ஜெய்ஷ் இ முகமது அமைப்பும் இதில் எதேச்சையாக இடம்பெறுகிறது.
இதனால், சீனா ஆதரவு சோவியத் எதிர்ப்பு அமைப்புகள் பின்வாங்குகின்றன. இந்த காலகட்டத்தில்தான் சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கிறது. இதை பெரிதாக்க சோவியத்தும் உதவுகின்றன. இது அடுத்ததடுத்த பகுதிகளுக்கும் சீனாவுக்கு எதிரான புரட்சியாக மாறியது.
பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு சீனா சாதகமான நிலைபாட்டிற்கு வர இந்த நிகழ்வுகளும் காரணமாக அமைகின்றன.
2011 மும்பை தாக்குதலுக்கு பின்னர், ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் தலைவர் மசூத் அஸார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படவில்லை.
மும்பை தாக்குதல், பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல்களின் போது, மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்தது.
மசூத் அஸார், சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டால் அவரது சொத்துக்கள் முடக்கப்படும். மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு எதிர்ப்பு வலுத்தன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவுடன் மசூத் அசாருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடைசி நேரத்தில் சீனா அதிகாரத்தை பயன்டுத்தி முட்டுக்கட்டை போட்டது.
மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதில் ஆராய வேண்டியவை நிறைய இருப்பதாக கூறிய சீனா, போதுமான கால அவகாசம் இன்னும் தேவை என்று அந்த சமயத்தில் சீனா தெரிவித்தது.