இலங்கையில் தாமே தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது.
இந்த தகவலை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ செய்தி முகவரமைப்பான AMAQ அறிவித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த செய்து அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் இதனை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரங்களை இன்னமும் வெளியிடவில்லை என்றும் ரொய்டர் தெரிவித்துள்ளது.
கிறிஸ்தவர்களின் மிக முக்கிய நாளான உயிர்த்த ஞாயிறு அன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து ஆறு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், தேசிய தாவீத் ஜமாத் என்ற உள்ளூர் கடும்போக்கு முஸ்லீம் அமைப்பொன்றே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கமும், படையினரும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஐ.எஸ் என்ற சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் சில பிரதேசங்களை இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தி இயங்கிவரும் ஐ.எஸ் என்ற இஸ்லரிய ஆயுதக் குழு தாங்களே சிறிலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாக உரிமை கோரியிருக்கின்றது.
ஐ.எஸ் ஆயுததாரிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளமாக ஹமாக் இதனை அறிவித்துள்ளது. எனினும் இந்தத் தாக்குதல்களை அவர்கள் எவ்வாறு மேற்கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தப்படுத்தக் கூடிய எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படவில்லை.
எவ்வாறாயினும் நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து நடத்தப்படட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பழி தீர்க்கும் வகையிலேயே சிறிலங்காவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச்சிலுள்ள இஸ்லாமியர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் கிறைஸ்சேர்ச் தாக்குதலுக்கும் – சிறிலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு விபரங்களையும் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.