ரஃபேல் பேரம் தொடர்பான புத்தகம் ஒரே நாளில் 8 ஆயிரம் பிரதிகள் விற்பனை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2019 (புதன்கிழமை)
தேர்தல் பணியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்ட, ரஃபேல் பேரம் தொடர்பான புத்தகம் 8 ஆயிரம் பிரதிகள் விற்பனையானதாகவும் இணைய தளத்திலிருந்து பல ஆயிரம் தடவைகள் டவுன் லோடு செய்யப்பட்டிருப்பதாகவும் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் தெரிவித்துள்ளது. பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் செவ்வாய்க் கிழமையன்று 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' என்ற தலைப்பில் எஸ். விஜயன் என்பவர் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக பாரதி புத்தகாலயம் அறிவித்திருந்தது. ஆனால், துவக்கம் முதலே இந்தப் புத்தக வெளியீட்டில் தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக பாரதி புத்தகாலயத்தின் நிர்வாகி நாகராஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.
"முதலில் ஆழ்வார்பேட்டையில் ஒரு ஹாலில் வெளியிடுவதாக தீர்மானித்திருந்தோம். ஆனால், அங்கு சென்று சிலர் கேள்வியெழுப்பியதால் அவர்கள் இடம் தர மறுத்துவிட்டனர். இதற்குப் பிறகு வேறொரு ஹாலில் வெளியிட தீர்மானித்தோம். அங்கும் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டன. இதையடுத்து எங்கள் கடையிலேயே வெளியீட்டு விழாவை நடத்தத் தீர்மானித்தோம். இந்த நிலையில் காலை 11 மணியளவில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்தவர் எனக் கூறிக் கொண்டு எஸ். கணேஷ் என்பவர் காவல்துறையினருடன் வந்தார்.
இந்தப் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்றும் இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்றும் கூறினார். அதற்குப் பிறகு எங்கள் கடைக்கு உரிமம் இருக்கிறதா, பதிப்பகத்திற்கு உரிமம் இருக்கிறதா, ஜிஎஸ்டி கட்டுகிறீர்களா, பதிவுசெய்திருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டார்.
அதற்குப் பின் எங்களிடம் இருந்து அந்தப் புத்தகத்தில் 145 பிரதிகளை அவர் எடுத்துச் சென்றுவிட்டார். நாங்கள் புத்தகத்தைப் பறிமுதல் செய்ததற்கான கடிதம் கேட்டபோது, அதனைக் கொடுக்க மறுத்தார். பிறகு, வெளியீட்டு விழாவை நடத்தக்கூடாது என்று மட்டும் கையால் எழுதிக் கொடுத்தார்.
இதற்குப் பிறகு இந்தப் பகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலரைப் பார்த்து முறையிட்டோம். அவர் காவல் நிலையம் சென்று புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். பிறகு அங்கு சென்று புத்தகங்களை வாங்கிக்கொண்டோம். எங்கள் கடையிலேயே திட்டமிட்டபடி வெளியீட்டு விழாவையும் நடத்தினோம்" என்கிறார் நாகராஜன்.
புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், "எந்த சட்டப் பிரிவின் கீழ் இவர்கள் புத்தகங்களைப் பறிமுதல் செய்தார்கள்? புத்தகத்தை வெளியிட்டால் வழக்குப் பதிவுசெய்வோம் என எந்தப் பிரிவின் கீழ் அச்சுறுத்தினார்கள்? சில அரசியல் சக்திகள் இவ்வாறு செய்யும்படி அழுத்தம் கொடுத்திருக்கக்கூடும். இதனை ஏற்க முடியாது" எனக் கூறினார்.
புத்தக வெளியீட்டு விழா முடிந்தவுனடேயே பதிப்பகம் வசம் இருந்த 8 ஆயிரம் பிரதிகளுக்கும் ஆர்டர்கள் வந்துவிட்டன என்றும் தற்போது மேலும் பத்தாயிரம் பிரதிகள் அச்சடிக்கவிருக்கிறோம் என்கிறார் நாகராஜன். "மேலும் புக்டே என்ற இணைய தளத்தில் இதன் பிடிஎஃபை இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதித்திருந்தோம். நேற்று மட்டும் ஒரு லட்சம் பேர் அந்த இணைய தளத்திற்கு வந்திருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கானவர்கள் இதனைத் தரவிறக்கம் செய்திருப்பார்கள்" என்கிறார் நாகராஜன்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தப் புத்தகத்தைப் போலவே மொத்தமாக எட்டுப் புத்தகங்களை வெளியிட பாரதி புத்தகாலயம் திட்டமிட்டிருந்தது. ரபேல் புத்தகத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து உடனடியாக அடுத்தடுத்த புத்தகங்களை அச்சடித்து முடித்து, விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது இந்த வெளியீட்டு நிறுவனம். நீட் அபாயம் நீங்கிவிட்டதா, மோடி ஆட்சியில் சீரழிந்த திருப்பூர், சாதிக் கொடுமைகளின் உச்சத்தில் மோடி ஆட்சி ஆகிய மூன்று புத்தகங்களும் இப்போதே விற்பனையில் உள்ளன.
"நாங்கள் இதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். 2009ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாகவும் புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். எந்த அரசும் இப்படியெல்லாம் பிரச்சனை ஏற்படுத்தியதில்லை" என்கிறார் பாரதி புத்தகாலயத்தின் ஆசிரியரான ராஜன்.
இதற்கிடையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரியான கணேஷ், இரண்டு உதவி ஆய்வாளர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.