மிஷன் சக்தி" சோதனையால் விண்வெளியில் கழிவுகள் - அமெரிக்கா எச்சரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2019 (வியாழக்கிழமை)
செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை அறிவித்தார்.
விண்வெளியில் கழிவுப் பொருட்களை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தாழ்வான உயரத்தில் இருக்கும் சுற்றுப்பாதையில் இந்த சோதனையை இந்தியா மேற்கொண்டதாகவும், இந்தியாவின் இச்சோதனையை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் பேட்ரிக் ஷனாஹன் தெரிவித்தார்.இந்தியா செயற்கைக்கோளைத் தடுத்து அழிக்கும் ஏவுகணை தொழில்நுட்பத்தை பெற்றுள்ள நான்காவது நாடாகியுள்ளது.
இதே போன்ற சோதனையை கடந்த 2007ஆம் ஆண்டு சீனா மேற்கொண்டது, சர்வதேச அளவில் எச்சரிக்கையாக அமைந்தது.என் செய்தி என்னவென்றால் நாம் அனைவரும் விண்வெளியில் வாழ்கிறோம். அதனை அசுத்தமாக்க வேண்டாம். விண்வெளி என்பது நாம் வணிகம் நடத்தும் இடமாக இருக்க வேண்டும். நாம் சுதந்திரமாக அங்கு செயல்பட வேண்டும்" என்று இந்தியாவின் சோதனையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷனாஹன் தெரிவித்தார்.
இது போன்ற சோதனைகளால் உருவாகும் கழிவுப்பொருட்கள், பொதுமக்கள் அல்லது ராணுவ செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை பாதிக்கலாம். மேலும், விண்வெளியில் உள்ள மற்ற பொருட்களுடன் மோதலாம்.
ஆனால், இந்த சோதனையால் ஏற்படும் கழிவுப்பொருட்கள் "சிதைந்து, ஒரு சில வாரங்களுக்குள் பூமியில் விழுவதை" உறுதி செய்ய, மிஷன் சக்தி சோதனையை வேண்டுமென்றே தாழ்வான வளிமண்டலத்தில் மேற்கொண்டதாக இந்தியா கூறியுள்ளது.
ஆனால், கழிவுப்பொருட்கள் எவ்வாறு பயணிக்கும் என்ற பாதையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் சோதனையில் இருந்து உருவான, 250க்கும் மேற்பட்ட கழிவுப்பொருட்களின் பாகங்களை அமெரிக்க ராணுவம் ஆராய்ந்து வருவதாக, பென்டகனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை அமெரிக்கா 1959-ம் ஆண்டு மேற்கொண்டது.சீனா 2007-ம் ஆண்டு இதனை மேற்கொண்டபோது, 865 கிலோ மீட்டர் உயரத்தில் செயலிழந்த வானிலை செயற்கைக்கோள் ஒன்றை அழித்தது. இது, சுற்றுப்பாதையில் பெரும் கழிவுப்பொருள் ஒன்றை விட்டுச் சென்றது.
சோதனைக்கு பிறகு, உருவாகும் கழிவுப்பொருட்கள் குறித்து நாசாவும் எச்சரித்துள்ளது.
"செயற்கைக்கோள் எதிர்ப்பு திறன்களை வேண்டுமென்றே சிலர் சோதனை செய்வதாகவும், இதனால் சுற்றுப்பாதையில் விடப்படும் கழிவுகளால் ஏற்படும் பிரச்சனையாக இன்றும் கையாண்டு வருவதாக" அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஜிம் ப்ரைடன்ஸ்டீன் அமெரிக்க காங்கிரஸிடம் தெரிவித்தார்.