சீமானின் 'நாம் தமிழர்' கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2019 (வெள்ளிக்கிழமை)
கடந்த தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி, இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அக்கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை தர தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனையடுத்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட சின்னம் ஒன்றை தங்களது கட்சிக்கு ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி சற்றுமுன் வெளியான தகவலின்படி 'நாம் தமிழர்' கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி இந்த சின்னத்தில் போட்டியிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விவசாயிகளுக்காக போராட்டம் செய்து வரும் தங்கள் கட்சிக்கு பொருத்தமான சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. மேலும் இக்கட்சியின் வேட்பாளர்கள் 50% வேட்பாளர்கள் அதாவது 20 பேர் பெண்கள் போட்டியிடுவார்கள் என்றும் இக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி, வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்