பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் பழகி, அவர்களை ஆபாசமாக படம் பிடித்து,பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக,முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக, வழக்கு தொடர்பான ஆவணங்கள், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எனினும் இதனை சிலர் திசை திருப்ப முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ராசாமணி தெரிவித்தார். இந்த விவகாரத்தை முன்வைத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராசாமணி எச்சரித்துள்ளார்.