ஈக்குவடோரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 413 ஆக உயர்வடைந்துள்ளதோடு, 2,500 பேர் காயமடைந்துள்ளதாக ஈக்குவடோரின் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை 7.8 ரிக்டர் அளவுகோளில் ஈக்குவடோரை உலுக்கிய நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தீவிர தேடுதல் பணிகளில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அவசரகால பணியாளர்கள் ஆகியோர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய நாளின் முடிவில் பலி எண்ணிக்கை, 246 ஆக இருந்த நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) அதன் எண்ணிக்கை 413 ஆக உயர்வடைந்துள்ளது.
ஈக்குவடோரில் நிலநடுக்கத்தினால் அதிக பாதிப்புக்களுக்கு இலக்காகியுள்ள ஆறு மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, அங்கு மீட்புப் பணிகளுக்காக 14 ஆயிரம் இராணுவம் மற்றும் பொது பாதுகாப்பு படை வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்டல் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்காக ஈக்குவடோர் அரசு 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.